ரோஜாக்கள் போதவில்லை!

பெருமதிப்புக்குரிய அன்பு நண்பர் ஆர்.பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு
ஒரு மடல்
=======================================================================ருத்ரா(இ.பரமசிவன்)
<epsivan@gmail.com>

 

 

 

 
ரோஜாக்கள் போதவில்லை!
=========================================ருத்ரா(இ.பரமசிவன்)
 14.02.2012

அன்பு நண்பர்
அறிவு சால்
ஆற்றல் சால்
ஆருயிர் நண்பர்
உயர் திரு.R.பூர்ணலிங்கம் அவர்களுக்கு

கல்லிடைக்குறிச்சி பள்ளி நண்பன் இ.பரமசிவன்
எழுதும் மடல்.

கணினி விசைப்பலகையின் வழியே
தேடு பொறியில்
விரல் சொடுக்கியத்தில்
தங்கள் பெயரை
தட்டச்சு செய்து பார்ப்போமே
என்று
தட்டு தடுமாறி தட்டியதில்
நான் வந்து சேர்ந்த இடம் கண்டு
உச்சி குளிர்ந்து போனேன்.

ஆம்.
அது என் நண்பன்
அறிவின் ஆட்சியால்
இந்த‌ எவரெஸ்ட் சிக‌ர‌த்தையும்
த‌ன் உள்ள‌ங்கைக்குள்
சிறு கூழாங்க‌ல் ஆக்கிக்கொண்டு
உலக‌மே உற்று நோக்கும்
உய‌ரத்தில் இருக்கும்
பெருமை மிக்க‌ இட‌ம் அல்ல‌வா i
அத‌னால்
நான் அடைந்த‌ பூரிப்புக்கு
எல்லையே இல்லை.
அத‌ன் விளைவே இம்ம‌ட‌ல்.
அந்த‌
தாமிர‌ப‌ர‌ணியும்
க‌ன்ன‌டிய‌ன் கால்வாயும்…

“வாய்க்காங்கரையில்”
முத்து முத்துக்களாய் உதிரும்
இலுப்பைப்பூக்களின்
இனியவாசனை கமழும்
மானேந்தியப்பர் கோவிலும்…

தில‌க‌ர் வித்தியால‌ய‌
வேப்ப‌ம‌ர‌ங்க‌ள் அட‌ர்ந்த‌
விளையாட்டுத் திட‌லும்….

அதில்
நீ(ங்க‌ள்) த‌ட்டி த‌ட்டி
என‌க்கு போக்கு காட்டி
வெகு லாவ‌க‌மாக‌
கூடைக்குள் ப‌ந்து வீசி
விய‌ர்வைக்க‌ளிப்பில்
க‌ளித்த‌ அந்த‌ நாட்க‌ளையும்…..

ப‌ள்ளியில் முத‌லாவ‌தாக‌
ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌
R.பூர்ண‌லிங்க‌ம் என்ற‌ பெய‌ர்
அங்கு
வைர‌ எழுத்துக்க‌ளாய் இன்னும்
மின்னிக்கொண்டிருக்கும் காட்சியையும்….

ம‌ற‌தி
என்ற‌ வெறும்
முற்றுப்புள்ளியில்
புதைக்க‌ப்ப‌ட‌முடியாத‌
ஒரு ம‌ன‌ப்பிர‌ள‌ய‌த்தின்
நின‌வ‌லைக‌ளே
இம்ம‌ட‌ல்.

அந்த “ஐம்பதுகளில்”
“டேப் ரிக்கார்டர்” என்பது
ஒரு ஆச்சரியம்.
அதில் “ஷேக்ஸ்பியர்” நாடக‌
ஆங்கில உச்சரிப்பை
தலைமை ஆசிரியர்
திரு.ரங்கநாதன் அவர்கள்
ஓடவிட்டு காட்டும் போது
எங்களுக்கு
எப்படி உச்சரிக்க வேண்டும் என்று
உங்கள் உச்சரிப்பை வைத்து
விளக்கி காட்டிய விதம்
இன்னும்
எனக்குள் புல்லரிப்புகள் ஏற்படுத்தும்
அற்புத நினைவின் தடங்கள் அல்லவா!

நாம் இருவ‌ரும்
பிராத்மிக் இந்தி டியூஷ‌னுக்கு
அந்த‌ பெருமாள் கோயில்
காண்டா ம‌ணியொலியில்
க‌ரைந்து உருகி
சென்று கொண்டிருப்போமே.
அன்போடு சொல்லித்த‌ரும்
அந்த‌ ஆசிரிய‌ருக்குள்…
இந்திக்கு முக‌ம் திருப்பும்
இந்த‌ நெருஞ்சிக்காட்டில்
இப்ப‌டி இர‌ண்டு இனிய‌
குறிஞ்சிக‌ளின் கொத்தா?
என்ற‌ விய‌ப்பு மேலோங்கி நிற்கும்

மிக அருகே
அந்த வாய்க்கால்
கலித்தொகையாய்
குறுந்தொகையாய்
குமிழிக‌ளில்
கும்மிய‌டித்துக்கொண்டு ஓடும் ஒலிக‌ள்
அந்த‌ அக்கிர‌ஹார‌த்து வீடுக‌ளின்
ஒவ்வொரு தூணிலும் துரும்பிலும்
“த‌மிழ் அவ‌தார‌ம்” எடுத்து
பிள‌ந்து வ‌ருவ‌தாய் தான்
ந‌ம‌க்கு கேட்கும்.
த‌மிழ்ச்செய்யுள்க‌ள் என்றால்
எவ்வ‌ள‌வு உயிர் ந‌மக்கு.
இந்தியைக்கூட‌ த‌மிழாகத்தான்
ப‌டித்தோம்.

மதுரையில்
நான் பணியாற்றிய நாட்களின்
தின‌ச‌ரி கால‌ண்ட‌ர்
தாள்க‌ள் அத்த‌னையும்
த‌ங்க‌த்தால் ஆன‌வை.
அப்போது நீ(ங்க‌ள்)
திருப்ப‌ர‌ங்குன்ற‌த்து தியாக‌ராய‌ர்
பொறியிய‌ல் க‌ல்லூரியில்
பொற்கால‌ம் ப‌டைத்துக்கொண்டிருந்தீர்க‌ள்.
அப்போதும்
என்னைத்தேடிவ‌ரும்
“பூர‌ண‌மான” அந்த ந‌ட்பின் பூ
இன்றும்
இதோ
என் ஈசிச்சேரின் அடியில்
ம‌க‌ர‌ந்த‌ இனிப்புக‌ளை
தூவிக்கொண்டிருக்கின்ற‌ன‌.
இத‌னால்
அச்ச‌மூட்டும் வாழ்கையின்
அந்தி சிவ‌ப்பு கூட‌
உ(ங்கள்) ரோஜா முக‌மாய்
ந‌ம்பிக்கை வீசுகின்ற‌ன‌.

அதே மதுரையில்
கலெக்டராய்
தாங்கள் பவனி வந்த போது
அந்த “உலகத் தமிழ் மாநாடு”மூல‌ம்
த‌மிழுக்கு த‌ங்க‌ள் கைக‌ள்
வைர‌க்கிரீட‌ம் சூட்டிய‌து க‌ண்டு
என் க‌ண்க‌ள் ம‌கிழ்ச்சியால்
ப‌னித்த‌ன‌.
முட்கிரீட‌ம் சூட‌ப்ப‌ட்டு
த‌மிழ் எதிரிக‌ளால்
சிலுவையில் அறையுண்டு கிட‌ந்த‌
சித்திர‌த்த‌மிழ்
சித்திர‌வ‌தைக‌ள் நீங்கி
சிரிப்ப‌து போல் அல்ல‌வா
தெரிந்த‌து என‌க்கு அது!

அந்த மாபெறும் வாய்ப்பு
கிடைத்த‌ அந்த‌ பொற்க‌ர‌ங்களை
“இன்விசிபிளாய்”
நானும் கொஞ்ச‌ம் தொட்டுக்கொண்டதாய்
எண்ணி எண்ணி
இறுமாந்திருக்கிறேன்.
ம‌கிழ்ச்சியின் சிக‌ர‌ம் அது.
அப்போது இம‌ய‌ம் கூட‌
ஜாடித்த‌ண்ணீரை மேலே கொண்டுவ‌ர‌
காக்காய் வீசும்
சிறு க‌ல் தான் என‌க்கு.
ந‌ண்ப‌னே!ந‌ண்ப‌னே!
ம‌யிலிற‌கு வேண்டாம்.
அன்ன‌த்தூவிக‌ள் வேண்டாம்
உன்னைப்போற்றி க‌வ‌ரி வீச‌!
இந்த‌ நீண்ட‌க்க‌விதையே போதும்.
நட்பூ எனும் உயிர் மூச்சு கொண்டு
முடைந்த‌ சாம‌ர‌ம் இந்த‌ பாம‌ர‌ம்.

உருண்டு உருண்டு
ஐம்பது “ஆண்டுகள்”
வேண்டுமானால் எனக்கு
மழுங்கிப்போயிருக்கலாம்.
ஆனாலும்
எங்கோயிருந்து ஒரு
“பூர‌ண‌”அக‌ச்சிவ‌ப்புக்கிர‌ண‌மாய்
நீங்கள் என்னை
புள‌காங்கிதப் ப‌டுத்திக்கொண்டேதான்
இருக்கின்றீர்க‌ள்!

என் வரலாறு
மிக‌ மிக‌ சுருக்க‌மான‌து,
என் ம‌க‌னும் ம‌க‌ளும்
அவ‌ர்க‌ள் குடும்ப‌த்துட‌ன்
அமெரிக்காவின் மேற்கு க‌ரையோர‌ம்
இருக்கின்ற‌ன‌ர்.
நானும் என் ம‌னைவியும்
அங்கும் இங்குமாய்
இருக்கிறோம்.
ருத்ரா என்ற‌ பெய‌ரில்
இணைய‌ த‌ள‌ங்க‌ளில்
க‌விதை எழுதுவ‌து ம‌ட்டுமே
என் தொழில்.
க‌ல்லிடைக்குறிச்சி எனும்
மின்ன‌ல் ஊஞ்ச‌லில்
ஆடிக்கொண்டிருக்கும் போது
பூர்ண‌லிங்க‌ம் எனும்
அந்த‌ பொன் க‌யிற்றைப்
ப‌ற்றிக்கொண்டு தான்
ஆடுவ‌துண்டு.
அந்த‌ ந‌ட்பு உண‌ர்ச்சியின்
உச்ச‌ க‌ட்ட‌மே
இம்ம‌ட‌ல்.

அன்றொரு நாள்…
இணையதளத்து சாளரம் வழியே
நோக்கியதில்
“ரோஜாக்கள் கொடுக்கலாம்”
(GIVE ROSE)
என்று
ஒரு மைல்கல் நட்டிருந்தார்கள்.
அத‌ன் வ‌ழியே
நீண்டு வ‌ந்த‌தே
இந்த‌ என் இத‌ய‌த்தின் ப‌ய‌ண‌ம்.

உள்ளத்துள் உவகை பெருக‌
நட்புடன்
உங்களுக்கு
ரோஜாவில் ஒரு பூச்செண்டு
கொடுப்ப‌த‌ற்கு
இந்த‌ உல‌க‌த்து தோட்ட‌ங்க‌ளின்
ரோஜாக்க‌ளை எல்லாம்
நான் குவிக்க‌ நினைத்தாலும்
அந்த‌ ரோஜாக்க‌ள் போத‌வில்லை.

இந்த‌ நீண்ட‌வ‌ரிக‌ளால்
உங்க‌ளை க‌ளைப்ப‌டைய‌
செய்த‌மைக்கு
ம‌ன்னித்து விடுங்க‌ள்.

இப்ப‌டிக்கு

அன்புட‌ன்
இ.ப‌ர‌ம‌சிவ‌ன்
(ருத்ரா)
< epsivan@gmail.com >

======================================================
இணைய நண்பர்கள் யாரேனும் அந்த‌
இதய நண்பன் கண்களில் இதை பட வைத்தால்
அவர்களுக்கு கோடி கோடி நன்றி.

அன்புட‌ன்
இ.ப‌ர‌ம‌சிவ‌ன்
(ருத்ரா)
======================================================

 

பளிங்கினால் செய்த ஒரு “பஃருளி யாறு”

பளிங்கினால் செய்த ஒரு “பஃருளி யாறு”

===============================================ருத்ரா

ஒரு கல்லிடைக்குறிச்சிக்காரனின்

கல் பொருது இறங்கும்

ப‌ஃறுளி யாறு

இந்த தாமிரபரணி ஆறு தான்

அந்த ஊர்க்காரர்களின்

பளிங்கு

கர்ப்பமே

இந்த தாமிரபரணிக்கவிதை

.

தண்ணீரா அது

!

கனவுகளின் கண்ணாடிப்பிழம்பு அது

.

தினம் தினம்

குளித்து எழுந்து உயிர்த்து எழும்

நினைவுகளில் அவர்கள்

திளைத்துக்கிடக்கிறார்கள்

.

இதனுள்

மேற்குமலை அடுக்கத்தின்

நடுக்கம் இருக்கும்

.

அகத்தியனின் நரம்பு துடிக்கும்

.

மாநாடு கூட்டாமலேயே

செம்மொழித்தமிழ்

ரத்தத்தின் ச‌த்த‌ம் கேட்கும்

.

க‌வ‌லைக‌ளின் புண்க‌ள் மொய்க்கும்

க‌லிங்க‌த்துப்ப‌ர‌ணிக‌ள் கூட‌

இந்த‌

தாமிர‌ப‌ர‌ணிக்குள் க‌ரைந்து போகும்

.

இதன் கூழாங்கற்களில்

விக்ரமாதித்யக்

கவிஞன்களின்

மைத்துளி நனைந்திருக்கும்

வாசனை மனத்துள்

மையல் மூட்டும்

.

கரை தழுவிய நாணல் பூக்கள்

வெள்ளைக்கவரி வீசி

நாரைகளை விரட்டும்

.

நண்டுகளும் கெண்டைகளும்

தாமிர பரணியின்

திவலைகள் தோறும்

கவிதைகள்

பதிவிறக்கம் செய்யும்

.

கரையோரப்

புல்லின்

புல்லிய வருடல்களுக்கு

புள்ளித்தவளைகள்

புல்லரித்து ஒலி தூவும்

.

அவை

மாண்டுக முனிவர்களின்

மாண்டூக்யோபனிஷதங்களாய்

இங்கே தான் மொழி பெயர்க்கும்

.

சமஸ்கிருத சடலங்களுக்குள்

உயிர் பாய்ச்சும் தமிழ் மூச்சு

அந்த தாமிரபரணிக் காட்சிகளில்

பரவிக்கிடக்கின்றது

!

கயிற்றரவு

கடவுளும் கந்தசாமியும்

என்று

எத்தனை எத்தனையோ

சிறுகதை ரத்தினங்களை

சோழிகுலுக்கி

பல்லாங்குழி ஆடிய‌

அந்த எழுத்துப்பிரம்மன்

புதுமைப்பித்தன்

பித்துபிடித்து உட்கார்ந்து க‌தைக்கு

பிண்ட‌ம் பிடித்து

உயிர்பூசிய‌ துறை

தாமிர‌ப‌ர‌ணியின்

சிந்துபூந்துறை அல்ல‌வா

!

கல்லிடைக்குறிச்சியின் வடகரையில்

ஊர்க்காட்டு மலை சாஸ்தாவும்

இதில்

உற்று முகம் பார்த்து

உருண்டைக்கண்ணையும்

முறுக்கு மீசையையும்

ஒப்பனை செய்து கொள்ளும்

.

அம்பாச‌முத்திர‌ம் தார்ச்சாலை கூட‌

தாமிர‌ப‌ர‌ணியின் க‌ழுத்தை

க‌ட்டிக்கொண்டே தான் கிட‌க்கும்

.

அங்கு

இர‌ட்டையாய்

ம‌ல்லாந்து கிட‌க்கும்

வ‌ண்டி ம‌றிச்சான் அம்ம‌ன்க‌ள் கூட‌

ஆற்றின்

நீர‌லைத் தாலாட்டில்

நீண்டு ப‌டுத்திருக்கும்

.

ஊமை ம‌ருத‌ ம‌ர‌ங்க‌ள் இன்று

கோட‌ரிக‌ளால் தின்னப்ப‌ட்டு

கொலைக்க‌ள‌மாய் காணும்

அந்த‌ சுடுகாட்டுக்க‌ரையெல்லாம்

ம‌னித‌னின் பேராசையை

புகைமூட்ட‌ம் போட்டுக்காட்டும்

.

தாமிர‌ப‌ர‌ணிக்குள்

முங்கி முங்கிக்குளித்து

தீக்குளிக்கும் போதெல்லாம்

த‌மிழின் நெருப்புத்தேன்

எலும்பு ம‌ஞ்ஞைக்குள்ளும்

எழுத்தாணி உழுது காட்டும்

.

 

================================================

ருத்ரா